tamilnadu

img

விளம்பரக் கம்பெனியுடன் இப்போதே மம்தா ஒப்பந்தம்!

கொல்கத்தா:
மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை மீண்டும் வெற்றிபெறச் செய்வதற்கான பொறுப்பை, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.

கொல்கத்தாவில் சுமார் 2 மணிநேரம் நடைப்பெற்ற மம்தா - கிஷோ சந்திப்பின்போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இடதுசாரிகள் ஆட்சியிலிருந்த வரை, மேற்குவங்கத்தில் பாஜக நுழைய முடியவில்லை. அப்போது பாஜக-வோடு கூட்டணி சேர்ந்து, அக்கட்சியை வளர்த்து விட்டவர்தான் மம்தா பானர்ஜி. 

1999-இல் மத்தியில் ரயில்வே அமைச்சர் பதவியை பெற்ற மம்தா பானர்ஜி, அதற்கு நன்றிக்கடனாக, மேற்குவங்கத்தில் பாஜக-வுக்கு சில எம்.பி.க்கள் கிடைக்கக் காரணமானார். சிங்கூர், நந்திகிராம் பிரச்சனைகளையொட்டி, பாஜகவையும் சேர்த்துக் கொண்டுதான் இடது முன்னணி அரசுக்கு எதிராக சதிகளை அரங்கேற்றினார். 2011-இல் ஆட்சிக்கு வந்தபின், இடதுசாரிகளின் அரசியல் செயல்பாட்டை, தனது ஆட்சியதிகாரம் மற்றும் குண்டர் படையின் மூலம் முடக்கிய மம்தா பானர்ஜி, மறுபுறத்தில் பாஜகவை மறைமுகமாக வளர்த்து விடும் வேலைகளில் இறங்கினார்.

வெளியில், பாஜக-வை எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், மம்தா பானர்ஜி கையிலெடுத்த, சிறுபான்மையினரை மத ரீதியாக அணிதிரட்டும் அரசியல், பெரும்பான்மை மதத்தினரை கச்சிதமாக பாஜக பக்கம் தள்ளிவிட்டது. பாஜக-வும் அதனை அறுவடைசெய்து, நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 18 எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றியது.

தற்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை, கூட்டம் கூட்டமாக பாஜக-வுக்கு இழுத்து வருகிறது. 
இந்நிலையில்தான், 2021 தேர்தலிலும் தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், பிரசாந்த் கிஷோர் விளம்பர நிறுவனத்துடன் மம்தா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி ஆட்சியைப் பிடிப்பதற்கும், 2015-ஆம் ஆண்டு, நிதிஷ்குமார் பீகாரில் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பிரச்சாரத் திட்டங்களை வகுத்துத் தந்தது பிரசாந்த் கிஷோர் நிறுவனம்தான்.அண்மையில், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 151 இடங்களுடன் அபார வெற்றிபெற்றதற்கும் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் வகுத்துத் தந்த திட்டங்களே காரணம் என்று கூறப்பட்டது.இந்த பின்னணியிலேயே, மம்தா பானர்ஜியும் மேற்குவங்கத்தின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கிஷோர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
 

;